58 ஆண்டுகளாக இயங்கி வந்த என்.எல்.சி. முதலாவது அனல்மின் நிலையம் மூடல் - புதிய அலகில் மின்உற்பத்தி தொடங்கியது

58 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த என்.எல்.சி. முதலாவது அனல்மின் நிலையம் மூடப்பட்டது. மேலும் புதிய அலகில் மின்உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2020-10-02 02:22 GMT
நெய்வேலி,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ளது பொதுத்துறை நிறுவனமான ‘நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்.எல்.சி.). இங்கு 3 சுரங்கங்களில் இருந்து பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, அதன் மூலம் 5 அனல் மின்நிலையங்களில் மணிக்கு 3,490 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு 8 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்கள், 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள், 4,500 பொறியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இதில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட முதலாவது அனல்மின் நிலையம் இந்தோசோவியத் கூட்டு முயற்சியில் 9 அலகுகளுடன் அமைக்கப்பட்டது. அதாவது முதல் 6 அலகுகள் தலா 50 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்டதாகவும், 3 அலகுகள் தலா 100 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்டதாகவும் உள்ளது.

இது 1962-ம் ஆண்டு முதல் 1970-ம் ஆண்டு வரையிலான காலங்களில் 3 கட்டங்களாக ரூ.77.81 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. 23.5.1962 அன்று 1-வது அலகும், 21.2.1970 அன்று 9-வது அலகும், மின்பகிர்மானத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டன. முதலாவது அலகு அப்போதைய ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனால் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த மின்நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் முழுவதும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் முதலாவது அனல் மின்நிலையத்தின் ஆயுட்காலம் நிறைவடைந்தது.

இதையடுத்து இந்த மின் நிலையத்திற்கு மாற்றாக அமைக்கப்பட்ட நெய்வேலி புதிய அனல்மின் நிலையத்தின் முதலாவது அலகு, வணிக ரீதியிலான மின்உற்பத்தியை தொடங்கியதை அடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் செப்டம்பர் வரை, முதலாம் அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தியை படிப்படியாக நிறுத்த திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு அலகாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு, இறுதியாக 6-வது அலகில் மேற்கொள்ளப்பட்டு வந்த மின்உற்பத்தியும் நிறுத்தப்பட்டது.

இதன் மூலம் முதலாவது அனல்மின் நிலையத்தின் மின்உற்பத்தி முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இந்த அனல் மின்நிலையம் இதுவரை 32 லட்சத்து 66 ஆயிரத்து 140 மணி நேரம் செயல்பட்டு 1,85.390 மில்லியன் யூனிட் மின்உற்பத்தி செய்துள்ளது. 58 ஆண்டுகளாக திறம்பட மின்உற்பத்தி செய்துவந்த, தாய் அனல் மின் நிலையமாக கருதப்பட்ட முதலாவது அனல்மின் நிலையத்திற்கு, என்.எல்.சி. இந்தியா நிறுவன ஊழியர்கள் உணர்ச்சிபூர்வமாக பிரியா விடை கொடுத்தனர்.

மேலும் செய்திகள்