திருப்பூர் அருகே சோக சம்பவம்: ரெயில் மோதி தொழிலதிபர் மனைவியுடன் பலி தற்கொலையா? போலீசார் விசாரணை

திருப்பூர் அருகே ரெயில் மோதி தொழிலதிபர் மனைவியுடன் பலியானார். அவர்கள் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

Update: 2020-10-02 02:45 GMT
திருப்பூர்,

கோவையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை புறப்பட்டது. காலை 8 மணிக்கு திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையம் ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்தபோது ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இதுகுறித்து அந்த ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் திருப்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் பற்றி அறிந்ததும் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்புசாமி மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

தண்டவாளத்துக்கு அருகே கார் ஒன்று கேட்பாரற்று நின்றது. இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் காரில் இருந்த செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், இறந்தவர்கள் தாராபுரம் அண்ணாநகரைச் சேர்ந்த தங்கமுத்து (வயது 63) மற்றும் அவரது மனைவி ராதாமணி (59) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, தங்கமுத்துவின் மகன் மதன்குமார் (23) மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும், ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலீலா, துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார்கள்.

தங்கமுத்துவின் மகன் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது நேற்று முன்தினம் இரவு வெளியில் செல்வதாக கூறிவிட்டு கணவன்-மனைவி இருவரும் வீட்டை விட்டு காரில் வெளியே வந்துள்ளது தெரியவந்தது. இந்த நிலையில் அவர்கள் திருப்பூரில் ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளனர்.

இதற்கிடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது தங்கமுத்து- ராதாமணி ஆகியோர் ரெயிலில் அடிபட்டு இறந்ததாக திருப்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தங்கமுத்து தொழிலதிபர் ஆவார். தாராபுரத்தில் இரண்டு வணிக வளாகங்கள் இவருக்கு சொந்தமாக உள்ளது. தங்கமுத்து-ராதாமணி தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு மதன்குமார் பிறந்துள்ளார். இதனால் மகனை மிகவும் செல்லமாக வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் மதன்குமார் மேல்படிப்பு படிக்க வெளிநாடு செல்ல வேண்டும் என்று கூறியதாகவும், அதற்கு தங்கமுத்து வெளிநாட்டுக்கு அனுப்ப மறுத்ததால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் தாராபுரத்தில் இருந்து திருப்பூர் வந்து வஞ்சிபாளையம் பகுதிக்குச் சென்று ரெயிலில் அடிபட்டு இறந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால் குடும்ப பிரச்சினை காரணமாக ரெயில் முன் பாய்ந்து கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்திலும் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தாராபுரத்தை சேர்ந்த தொழிலதிபர் மனைவியுடன் ரெயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்