குமரி காவல்துறையில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு: பலியான சப்-இன்ஸ்பெக்டருக்கு மலர் அஞ்சலி - போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் நடந்தது

குமரி மாவட்ட காவல்துறையில் கொரோனாவுக்கு முதல் பலியான சப்-இன்ஸ்பெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2020-10-02 00:05 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மக்களை அச்சுறுத்தி வருகிறது. அதிலும் கொரோனா தடுப்பு முன்களப்பணியாளர்களான போலீசார், டாக்டர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மை பணியாளரக்ள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.

போலீஸ் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என ஏராளமானோர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நித்திரவிளையை அடுத்த காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 47) என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

குமரி மாவட்ட தனிப்பிரிவு போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக இருந்த அவர், பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றினார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். குமரி மாவட்ட காவல்துறையில் கொரோனாவுக்கு முதல் பலியானவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

இதைத்தொடர்ந்து குமரி மாவட்ட காவல்துறை சார்பில் சுரேஷ்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று காலை நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. இதற்காக சுரேஷ்குமாரின் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டு இருந்தது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், சுரேஷ்குமாரின் உருவப்படத்துக்கு மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து உதவி சூப்பிரண்டுகள் விஸ்வேஸ் பி.சாஸ்திரி (குளச்சல்), சாய்பிரனீத் (பயிற்சி), கூடுதல் சூப்பிரண்டுகள் ஈஸ்வரன், மணிமாறன், துணை சூப்பிரண்டுகள் சாம் வேதமாணிக்கம் (ஆயுதப்படை), வேணுகோபால் (நாகர்கோவில்), பாஸ்கரன் (கன்னியாகுமரி), தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்மணி மற்றும் ஆயுதப்படை, அதிவிரைவுப்படை, தனிப்பிரிவு போலீசார் ஆகியோர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் சுரேஷ்குமார் மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்