நெல்லை அருகே மதுபோதையில் பயங்கரம்: தலையில் கல்லைப்போட்டு தனியார் நிறுவன ஊழியர் கொலை

நெல்லை அருகே மதுபோதையில் தலையில் கல்லைப்போட்டு தனியார் நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2020-10-02 04:48 IST
நெல்லை,

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நல்லூரைச் சேர்ந்தவர் செந்தில் விநாயகம். இவர் மும்பையில் வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வந்தார். இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 25), பாளையங்கோட்டையை அடுத்த கொங்கந்தான்பாறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று காலையில் பாளையங்கோட்டை அருகே நடுவக்குறிச்சி காட்டுப்பகுதியில் தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலின் அருகில் ரத்தம் தோய்ந்த பாறாங்கல், உருட்டுக்கட்டை கிடந்தன. அங்கு மதுபாட்டில்களும் கிடந்தன.

போலீசார் விசாரணை

அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து பாளையங்கோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா, பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இறந்த சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதன் விவரம் வருமாறு:-

நண்பர்கள்

கொலை செய்யப்பட்ட சதீஷ்குமார் பணியாற்றிய நிறுவனத்தில், பாளையங்கோட்டை அருகே நடுவக் குறிச்சியைச் சேர்ந்த சின்னத்துரை மகன் சுடலை (35), சண்முகம் மகன் மற்றொரு சுடலை (25), தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே நாணல்காடு பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் முத்துகுமார் (34), வேல்துரை மகன் சின்னத்துரை (32) ஆகியோரும் பணியாற்றினார்கள்.

இவர்கள் அனைவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இவர்களுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

மதுபோதையில் தகராறு

நேற்று முன்தினம் சதீஷ்குமார் மோட்டார் சைக்கிளில் நடுவக்குறிச்சிக்கு சென்றார். பின்னர் அவர் தன்னுடைய நண்பர்களான சுடலை, மற்றொரு சுடலை, முத்துகுமார், சின்னத்துரை ஆகியோருடன் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார். அங்கு அவர்கள் சமையல் செய்து சாப்பிட்டு, மது குடித்தனர்.

அப்போது மதுபோதையில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுடலை உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து சதீஷ்குமாரின் தலையில் பாறாங்கல்லை தூக்கிப்போட்டும், உருட்டுக்கட்டையால் அடித்தும் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

4 பேர் கைது

இதற்கிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய சுடலை, மற்றொரு சுடலை, முத்துகுமார், சின்னத்துரை ஆகிய 4 பேரும் நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீலிசாவிடம் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும் பாளையங்கோட்டை தாலுகா போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதையடுத்து சுடலை உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை அருகே தலையில் கல்லை தூக்கிப்போட்டு தனியார் நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்