ராகுல் காந்தி கைதுக்கு சரத்பவார் கண்டனம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு சரத்பவார் கண்டனம் தெரிவித்து உள்ளார்.;

Update: 2020-10-01 21:14 GMT
மும்பை,

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் கூட்டு பலாத்கார வன்கொடுமையால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை பார்க்க சென்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தியதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ராகுல்காந்தி நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

மேலும் தடை உத்தரவை மீறிச் சென்றதற்காக இருவரையும் உத்தரபிரதேச போலீசார் கைது செய்தனர்

சரத்பவார் கண்டனம்

இந்த சம்பவத்திற்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:-

உத்தரபிரதேச போலீசார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திடம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட விதம் மிகவும் கண்டனத்திற்கு உரியது. சட்டத்தை காப்பாற்ற வேண்டியவர்கள் ஜனநாயக மாண்புகளை இப்படி நசுக்குவது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல தேசியவாத காங்கிரசை சேர்ந்த மாநில மந்திரிகள் ஜெயந்த் பாட்டீல், அனில் தேஷ்முக் மற்றும் சுப்ரியா சுலே எம்.பி. ஆகியோரும் ராகுல்காந்தியின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்