67 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள்: திருப்பரங்குன்றம் யூனியனில் 3 நாட்களில் 349 பேர் விண்ணப்பம்
திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனில் உள்ள 67 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு கடந்த 3 நாட்களில் 349 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால் கடும் போட்டி நிலவுகிறது.
திருப்பரங்குன்றம்,
மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் 358 அமைப்பாளர்கள், 71 சமையலர்கள், 559 சமையல் உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஒப்புதல் ரசீது வழங்கப்பட்டு வருகிறது.
இதில் திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமா மகேஸ்வரி, கண்ணன், அலுவலக உதவியாளர்கள் குமரவேல், கவிதா, ரமணி ஆகியோர் மனுதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று ஒப்புதல் ரசீது வழங்கி வருகின்றனர்.
இந்த யூனியனில் உள்ள சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 67 அமைப்பாளர்கள் பணிக்கு கடந்த 3 நாளில் 349 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதே போல் சமையலர் 11 பேருக்கு 13 பேர் விண்ணப்பித்து உள்ளனர். 82 சமையலர் உதவியாளர் பணிக்கு 111 பேர் விண்ணப்பித்துள்ளனர். கணவன், சகோதரர் மற்றும் நண்பர்களுடன் பெண்கள் ஆர்வத்துடன் வந்து விண்ணப்பித்தனர்.
குறிப்பாக ஏராளமான பெண்கள் தங்களது கைக்குழந்தையுடன் வந்தனர். சத்துணவு அமைப்பாளருக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. ஆனால் பெரும்பாலான பட்டதாரி பெண்களும் விண்ணப்பித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற 5-ந்தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வாங்கப்பட உள்ளதால் மேலும் ஏராளமானோர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது.