மதுரையில் 88 பேருக்கு கொரோனா - 106 பேர் குணம் அடைந்தனர்
மதுரையில் நேற்று 88 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் 106 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.
மதுரை,
மதுரையில் நேற்று புதிதாக 88 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 60 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 629 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் மதுரையில் நேற்று ஒரே நாளில் 106 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 90 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 515 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 725 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
மதுரையில் நேற்று கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையிலும் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வில்லை என்று சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
பரிசோதனைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்திட வேண்டும் என்றும் சுகாதார துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.