ராமேசுவரம் கோவிலில் 22 தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் நீராட அனுமதி கிடைக்குமா?

ராமேசுவரம் கோவிலில் 22 தீர்த்த கிணறுகளில் நீராட அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர்.

Update: 2020-10-01 10:00 GMT
ராமேசுவரம்,

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்குள் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தாலும் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடுவதற்கு தொடர்ந்து தடை அமலில் இருந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் ராமேசுவரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பக்தர்கள் நீராட தடை அமலில் இருந்து வருகிறது.

கடந்த 6 மாதத்திற்குமேல் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகள் மற்றும் பிரகாரங்கள் பக்தர்கள் நடமாட்டம் இல்லாமல் முழுமையாக வெறிச்சோடி காணப்படுகிறது.மேலும் 22 தீர்த்த கிணறுகளை நம்பி வாழும் 400-க்கும் மேற்பட்ட யாத்திரை பணியாளர்கள் முழுமையாக வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பக்தர்கள் நீராட அனுமதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் கோவிலுக்கு வரும் பக்தர்களும் மற்றும் தீர்த்தம் இறைத்து ஊற்றும் யாத்திரை பணியாளர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதற்கு இந்துசமய அறநிலையத்துறை மற்றும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் 22 தீர்த்தங்களிலும் நீராட அனுமதி வழங்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கையில் கோடி தீர்த்தம் அடங்கிய பாட்டில்களுடன் கோவில் கிழக்கு வாசல் பகுதிக்கு வந்தனர்.அப்போது கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு கோடி தீர்த்தம் வழங்கி பக்தர்கள் மீது தெளித்தனர்.

பின்னர் கோவில் அலுவலகம் சென்ற அவர்கள் திருக்கோவில் இணை ஆணையரிடம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்கள் நாட்களில் பக்தர்கள் நீராடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்