செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் சிறப்பு ரெயிலில் மாநில அரசு ஊழியர்களுக்கு அனுமதி மறுப்பு

செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் சிறப்பு ரெயிலில் மாநில அரசு ஊழியர்கள் பயணம் செய்ய அனுமதி மறுத்து ரெயில்வே போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Update: 2020-09-30 23:23 GMT
செங்கல்பட்டு,

கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பொது போக்குவரத்து முடக்கப்பட்டு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ரெயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு என செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயிலில் தலைமைச்செயலகம், வணிக வரித்துறை, கல்வித்துறை உள்ளிட்ட அலுவலகங்களுக்கு செல்லும் மாநில அரசு ஊழியர்கள் ரெயில்வே துறையின் சிறப்பு அனுமதியுடன் பயணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல பணிக்கு செல்வதற்காக செங்கல்பட்டு ரெயில் நிலையத்திற்கு வந்த 100-க்கும் மேற்பட்ட மாநில அரசு ஊழியர்களை செங்கல்பட்டு ரெயில் நிலைய வாயிலில் ரெயில்வே போலீசார் தடுத்து நிறுத்தினர். சிறப்பு ரெயிலில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து அவர்கள் அரசு பஸ்களில் ஏறி வேலைக்கு சென்றனர்.

இது குறித்து ரெயில்வே அதிகாரியிடம் கேட்டபோது, “சிறப்பு ரெயிலில் ரெயில்வே ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மாநில அரசு ஊழியர்கள் அனுமதிக்கப்படவில்லை” என்றனர்.

மேலும் செய்திகள்