கடலில் விளையாடிய 5-ம் வகுப்பு மாணவன் கதி என்ன? அலை இழுத்து சென்றதால் தேடும் பணி தீவிரம்
மண்டைக்காடுபுதூரில் கடலில் விளையாடிய 5-ம் வகுப்பு மாணவனை அலை இழுத்து சென்றது. அவன் என்ன ஆனான் என்பது தெரியவில்லை. அவனை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மணவாளக்குறிச்சி,
மண்டைக்காடுபுதூர் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் சகாய ராபின் (வயது 39), மீனவர். இவரது மகன்கள் ரோகன் (13), ரோகித் (10). ரோகித் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இவர்களது வீடு கடற்கரையில் உள்ளது.
நேற்று மதியம் ரோகித் தனது அண்ணன் ரோகன் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த 3 சிறுவர்களுடன் வீட்டின் அருகே உள்ள கடலில் அலையில் மரக்கட்டையை வீசி விளையாடி குளித்து கொண்டிருந்தான்.
அப்போது திடீரென எழுந்த அலை ரோகித்தை இழுத்து சென்றது. இதை பார்த்த அண்ணன் ரோகனும், சக சிறுவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ரோகன் வீட்டுக்கு விரைந்து சென்று நடந்ததை பெற்றோரிடம் கூறினான். தகவல் அறிந்த தந்தை சகாய ராபின் மற்றும் உறவினர்கள் கடலுக்கு விரைந்து வந்து ரோகித்தை தேடினர். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மண்டைக்காடு சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன், குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் கிங்ஸ்லி, தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவன்ஸ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கடலில் தேடினர். நீண்ட நேரம் தேடியும் ரோகித்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
ரோகித்தின் உறவினர்கள் மற்றும் முத்து குளிக்கும் நீச்சல் வீரர்கள் கடலில் இறங்கி மாயமான ரோகித்தை தேடி வருகின்றனர். அவனது கதி என்னவென்று தெரியாமல் கரையில் உறவினர்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர். இந்த சம்பவம் மண்டைக்காடு புதூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.