பல்லடம் அருகே பரபரப்பு: பாலியல் தொல்லை கொடுத்த பனியன் நிறுவன மேலாளரை அடித்து உதைத்த இளம் பெண்கள் - வீடியோ காட்சி வாட்ஸ் அப்பில் பரவுகிறது
பல்லடம் அருகே பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன மேலாளரை இளம் பெண்கள் இருவர் அடித்து உதைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பல்லடம்,
திருப்பூர் மாவட்டம் அவினாசி சூளை பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 42). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் மதுரையை சேர்ந்த 24 வயது மற்றும் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய 2 பெண்கள் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் சிவக்குமார் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க அந்த 2 பெண்களும் திட்டமிட்டனர்.
இதன் காரணமாக கடந்த 14-ந் தேதி சிவக்குமாரை பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் பாச்சாங்காட்டுப்பாளையம் குட்டை காட்டுப் பகுதிக்கு உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி 2 பெண்களும் அழைத்து சென்றனர். அப்போது இருவரும் சேர்ந்து சிவக்குமாரை தாக்கி முகத்தில் மிளகாய் பொடி தூவி கட்டிப்போட்டனர்.
பின்னர் இது குறித்து காவல் துறை அவசர உதவி எண் 100-க்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு பல்லடம் போலீசார் விரைந்து வந்து அவர்கள் 3 பேரையும் பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஜே.ஜே.மில்ஸ் என்ற பனியன் நிறுவனத்தில் அவர்கள் மூவரும் பணியாற்றி வந்ததும், சிவக்குமார் அந்த பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லைகளை கொடுத்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அந்த பெண்கள் பணிபுரிந்த இடத்தில் இருந்து அவர்களை சிவக்குமார் வேலையை விட்டு நீக்கி அனுப்பியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த 2 பெண்களும் சிவக்குமாரை பழிவாங்க திட்டமிட்டு பல்லடம் அருள்புரம் பாச்சாங்காட்டுப்பாளையத்துக்கு வரவழைத்து அவர் மீது மிளகாய் பொடி தூவி, கட்டி வைத்து தாக்கியதும் தெரியவந்தது. இதை அந்த 2 பெண்களும் ஒப்புக்கொண்டனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார் 2 பெண்களும் கொடுத்த புகாரின் பேரில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அதுபோல சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் 2 பெண்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
தற்போது அவர்கள் 3 பேரும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இதற்கிடையே சிவக்குமாரை தாக்கிய ஒரு பெண் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 28-ந் தேதி கொடுத்த மனுவில், “திருப்பூர் மாவட்டம் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து தங்கள் மீது வழக்கு பதிவு செய்து உள்ளதாகவும், பல்லடம் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கோமதி தங்களை தாக்கியதாகவும்” கூறியிருந்தார்.
இது தொடர்பாக பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீராமச்சந்திரன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “2 பெண்களும் திட்டமிட்டு ஆயுதங்களுடன் சென்று சிவக்குமாரை தாக்கியதால் அந்த பெண்கள் மீதும், பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் சிவக்குமார் மீதும் வழக்கு பதிவு செய்து பாகுபாடின்றி விசாரணை செய்து 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் தொடர்பான வழக்கு என்பதால் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கோமதி உடன் இருந்தார். அவர் வழக்கு விசாரணையில் பங்கேற்காத நிலையில் அவர் மீது கூறப்பட்டுள்ள புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றார்.
பல்லடத்தில் தனியார் நிறுவன மேலாளர் மீது மிளகாய் பொடி தூவி இளம் பெண்கள் அடித்து உதைத்த வீடியோ காட்சி வாட்ஸ்அப்பில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.