சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டதால் பயணிகளிடம் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
கோவையில் இருந்து சென்னைக்கு செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சேலம் வழியாக இயக்கப்படுகிறது. நேற்று காலை இந்த ரெயிலில் பயணம் செய்ய ஏராளமான பயணிகள் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர்.
இந்த நிலையில் சேலம் ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு பாபு தலைமையில் போலீசார் திடீரென்று அங்கிருந்த பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.
தொடர்ந்து ரெயில் நிலையம் முன்புறமுள்ள வாகனங்கள் நிறுத்துமிடம், பார்சல் அனுப்பும் அலுவலகம் மற்றும் ரெயில் தண்டவாளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது.
இந்த திடீர் சோதனை குறித்து போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந் தேதி பெங்களூருவில் தீவிரவாதி ஒருவனை போலீசார் சுட்டுக்கொன்றனர். எனவே அந்த நாளில் தீவிரவாதிகளால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் இதேநாளில் தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வரப்படுகிறது.
அதன்படி நேற்று சேலம் ரெயில் நிலையத்தில் ஏதாவது வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து முன் எச்சரிக்கையாக சோதனை நடத்தப்பட்டது. அதேபோன்று பயணிகளிடமும் சோதனை நடத்தப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போலீசார் நடத்திய இந்த திடீர் சோதனையால் நேற்று காலை ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பயணிகளிடையே பரபரப்பு நிலவியது.