வீட்டுமனைப்பட்டா ரத்து செய்ததை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் - தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது

பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப்பட்டா ரத்து செய்ததை கண்டித்து தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2020-09-30 13:15 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் ஏ.ரெட்டிஅள்ளி பகுதியில் ஆதிதிராவிடர், அருந்ததியர், குறவர், போயர் உள்ளிட்ட பட்டியலின மக்களுக்கு 1,100 வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் 900-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. இந்த வீட்டுமனைப்பட்டாக்களை அரசு ரத்து செய்து அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப்பட்டாக்களை ரத்து செய்ததை கண்டித்து தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்பிரமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தை கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயந்தி வரவேற்று பேசினார். கிழக்கு மாவட்ட செயலாளர் ஜானகிராமன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் தேவராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் குமார், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் தென்றல் யாசின், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சி செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன், மாநில அமைப்புச் செயலாளர் கோவேந்தன, தி.மு.க. முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் நந்தன், மாவட்ட துணை செயலாளர் மின்னல் சக்தி, மாவட்ட செய்தி தொடர்பாளர் பாண்டியன், தொகுதி செயலாளர் சக்தி, மாவட்ட பொருளாளர் மன்னன், நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கோட்டை கலைவாணன், முன்னாள் மாவட்ட செயலாளர் ராமன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

தர்மபுரி மாவட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப்பட்டாக்களை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும். அரசு புறம்போக்கு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வீடற்ற மக்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி தொகுதி செயலாளர் சக்தி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்