சுவர் விளம்பரம் அழிக்கப்பட்டதால் மோதல்: போலீஸ் நிலையத்தில் மருதுசேனை அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு

கீழ்வேளூர் அருகே சுவர் விளம்பரம் அழிக்கப்பட்டதால் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் மருதுசேனை அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-09-30 10:45 GMT
சிக்கல், 

நாகை அருகே பொரவாச்சேரி மெயின் ரோட்டில் உள்ள பாரதிநகரில் அடுத்த மாதம் நடக்கும் மருதுபாண்டியர் குருபூஜைக்காக மருதுசேனை அமைப்பினர் சுவரில் விளம்பரம் செய்திருந்தனர். இந்த விளம்பரத்தை சிலர் அழித்தனர். இது குறித்து அந்த அமைப்பினர் கீழ்வேளூர் போலீசில் புகார் அளித்தனர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொரவச்சேரியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரை சிலர் வழிமறித்து உனது ஊரை சேர்ந்தவர்கள் தான் எங்களது விளம்பரத்தை அழித்துள்ளனர் என கூறி அவரை தாக்கினர். இது குறித்து சந்திரசேகரன் கீழ்வேளூர் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் மஞ்சக்கொல்லையை சேர்ந்த பழனி, பனைமேடுஆதவன், நாகையை சேர்ந்த மாரிமுத்து, பொரவச்சேரியை சேர்ந்த விக்னேஷ், அம்பரிஷ் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மருதுசேனை அமைப்பின் நாகை நகர செயலாளர் மாரிமுத்து தாங்கள் எழுதிய சுவர் விளம்பரத்தை அழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று கீழ்வேளூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று காலை மருதுசேனை அமைப்பின் மாநிலதலைவர் ஆதிநாராயணன் கீழ்வேளூர் போலீஸ் நிலையத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்தார். இதனால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர் தாங்கள் கொடுத்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் எதிர் தரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தங்களது அமைப்பை சேர்ந்தவர் கைது செய்திருப்பதாக கூறி போலீசாரிடம் முறையிட்டார். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார், புகார் மீது உரிய விசாரணை நடத்தி வருவதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து அந்த அமைப்பினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்