போலீஸ் நிலையத்தில் பதிவாகும் வழக்குகளை கையாள்வது குறித்து போலீசாருக்கு பயிற்சி
போலீஸ் நிலையத்தில் பதிவாகும் வழக்குகளை கையாள்வது குறித்த பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.;
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள போலீசாருக்கு போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளை கையாள்வது குறித்த பயிற்சி 5 நாட்கள் சிவகங்கையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் பணிபுரியும் 2 தலைமை காவலர்கள், 2 முதல் நிலை காவலர் மற்றும் இரண்டு காவலர்களுக்கு இந்த பயிற்சி கொடுக்கப்படுகிறது.
இந்த பயிற்சியின் போது கோப்புகளை எப்படி எழுதுவது மற்றும் சாட்சிகள், தடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் தேக்கம் இன்றி நீதிமன்ற விசாரணைக்கு செல்வதற்கு உதவியாக இருக்கும்.
இதில் பயிற்சி பெற்ற காவலர்கள், வழக்கு கோப்புகளை திறம்பட கையாண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்று தர இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.