சாத்தூர் அருகே, தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
சாத்தூர் அருகே தூக்குப்போட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.
சாத்தூர்,
சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சவுந்திரராஜன். இவரது மகள் காயத்ரி (வயது23). இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா படர்ந்தபுளியை சேர்ந்த சீனிவாசனுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் ஆனது.
இந்தநிலையில் காயத்ரி சில நாட்கள் மட்டும் கணவனுடன் வசித்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக காயத்ரி சின்னகாமன்பட்டியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்து விட்டார். அதன் பின்னர் அந்த கிராமத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார்.
மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ பெற்றோர், காயத்ரியை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காயத்ரியின் தாய் அழகுலட்சுமி கொடுத்த புகாரின் படி சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சாத்தூர் ஆர்.டி.ஓ. காசி செல்வி விசாரணை நடத்தி வருகிறார்.