குடியாத்தத்தில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்குவதில் காலதாமதம் - ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை

குடியாத்தத்தில் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகக்கூறி பொதுமக்கள் முற்றுகை மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2020-09-30 04:47 GMT
குடியாத்தம்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாவில் 145 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ளன. ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு மூலம் பொருட்களை பெற்று வந்தனர். தற்போது குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்களில் ஒருவர் சென்று பயோமெட்ரிக் முறையில் விரல்ரேகையை பதிவு செய்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகிறது.

அதன்படி பொதுமக்கள் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கச் சென்று கைரேகைகளை பதிவு செய்தபோது, அந்த எந்திரத்தில் கைரேகை பதிவாகவில்லை. அதுகுறித்து கேட்டபோது சர்வர் வேலை செய்யாததால் கைரேகை பதிவாகவில்லை என்று விற்பனையாளர்கள் தெரிவித்தனர். இதனால் பல ரேஷன் கடைகளில், குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியாமல் தவித்துவந்தனர்.

இந்தநிலையில் இம்மாத கடைசி 2 நாட்களே உள்ள நிலையில் நேற்று காலை குடியாத்தம், காளியம்மன்பட்டி எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் உள்ள பகுதி நேர ரேஷன் கடையில் பொருட்களை வாங்க வந்தவர்கள், கைரேகைகளை பதிவு செய்தபோது சர்வர் வேலை செய்யாததால் விரல்ரேகை பதிவாகவில்லை என கூறியுள்ளனர். 10 நாட்களுக்கும் மேலாக தினமும் பொருட்களை வாங்க ரேஷன் கடைக்கு வந்து, பொருட்கள் வாங்க முடியாமல் திரும்பி செல்வதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலர் தேவி, வருவாய் ஆய்வாளர் ஜோதி ராமலிங்கம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சர்வர் வேலை செய்யாவிட்டாலும் 2 நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனைத்து பொருட்களையும் வழங்குவதாக உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

மேலும் செய்திகள்