பாசனத்துக்காக கோமுகி அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு

பாசனத்துக்காக கோமுகி அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

Update: 2020-09-30 03:30 GMT
கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன் மலை உள்ளது. இந்த மலையில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக பொட்டியம், கல்படை மற்றும் மல்லிகைபாடி ஆகிய ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு தண்ணீர் வரும். இவ்வாறு வரும் தண்ணீர் 44 அடி வரைக்கும் சேமித்து வைக்கப்படும். கோமுகி அணையின் மொத்த கொள்ளளவு 46 அடி ஆகும். ஆனால் அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி வரை மட்டுமே சேமித்து வைத்து ஒவ்வொரு ஆண்டும் பாசனத்துக்காக அக்டோபர் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் 11 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறும்.

அதன்படி இந்த ஆண்டு கல்வராயன்மலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கோமுகி அணைக்கு நீர் வரத்துஅதிகரித்து அதன் முழு கொள்ளளவான 44 அடியை எட்டியது. இதையடுத்து கடந்த 17-ந் தேதி அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் புதிய பாசன வாய்க்கால் வழியாக வெளியேற்றப்பட்டது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பின. பின்னர் நீர் வரத்து குறைந்ததால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றுவது கடந்த 21-ந் தேதி நிறுத்தப்பட்டது.

தற்போது சம்பா சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருவதால் கோமுகி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று பாசனத்துக்காக கோமுகி அணையில் நாளை(வியாழக்கிழமை) முதல் தண்ணீர் திறந்து விட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை(நீர்வளம்) அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். முதல் 15 நாட்களுக்கு வினாடிக்கு 110 கன அடியும், அதன் பிறகு கூடுதலாகவும் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பழைய பாசன வாய்க்கால் வழியாக திறக்கப்படும் தண்ணீர் மண்மலை, கரடிசித்தூர், சோமண்டார்குடி, செம்படா குறிச்சி, ஆலத்தூர் உள்ளிட்ட 11 கிராமங்களில் உள்ள அணைக்கட்டுகள் வழியாக பாசன நிலங்களை சென்றடைய உள்ளது. பாசனத்துக்காக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்