ஆசனூர் அருகே பரபரப்பு லாரியை வழிமறித்து கரும்புகளை தின்ற யானைகள் போக்குவரத்து பாதிப்பு

ஆசனூர் அருகே லாரியை வழிமறித்து கரும்புகளை தின்ற யானைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2020-09-30 00:45 GMT
தாளவாடி,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி வழியாக திண்டுக்கல்லில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து பரபரப்பாக காணப்படும்.

தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக தமிழக-கர்நாடக மாநில எல்லையான காரப்பள்ளம் அருகே கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டிகளுடன் சாலையில் உலா வருவது தொடர்கதையாகி வருகிறது.

கரும்புகளை தின்றன

இந்த நிலையில் நேற்று காலை அடர்ந்த வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டமாக வந்தன. பின்னர் இந்த யானைகள் காரப்பள்ளம் அருகே சாலையில் வந்து நின்று கொண்டன. அப்போது அந்த வழியாக தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

கரும்பு வாசனையை நுகர்ந்த யானைகள் நடுரோட்டுக்கு வந்து லாரியை வழிமறித்தபடி நின்று கொண்டன. இதனால் பயந்துபோன டிரைவர் லாரியை நிறுத்தினார். தொடர்ந்து யானைகள் துதிக்கையை உயர்த்தியபடி லாரியில் இருந்த கரும்புகளை இழுத்து தின்ன தொடங்கின. கரும்புகளை யானைகள் சுவைத்து தின்றதை லாரி கிளீனர் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு யானைகள் தானாகவே அங்கிருந்து சென்றன. அதன்பின்னரே டிரைவர் நிம்மதி பெருமூச்சு விட்டார். இதனால் அந்த ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தொடர்ந்து வாகனங்களை வழிமறித்து அட்டகாசம் செய்துவரும் காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்