கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கிய கல்லூரி மாணவர் மாயம்

கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கிய கல்லூரி மாணவர் மாயமானார்.;

Update:2020-09-30 05:43 IST
மாமல்லபுரம்,
சென்னையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 13 பேர் ஒரு குழுவாக பொழுது போக்குவதற்காக செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த இ.சி.ஆர். சாலையில் உள்ள புலிக்குகை கடற்கரைக்கு நேற்று சென்றனர். இதில் மாணவர்கள் அனைவரும் புலிக்குகைக்கு பின்புறம் உள்ள கடலில் சந்தோஷமாக குளித்தனர். இதில் சென்னை தனியார் கலை கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படிக்கும், மேற்கு மாம்பலத்தை சேர்ந்த மாணவர் சந்தோஷ் (வயது 19) , மற்றொரு மாணவர் நவீன் (20) ஆகியோரை ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது.

அருகில் குளித்து கொண்டிருந்த சக மாணவர்கள் கடல் அலையில் சிக்கிய அவர்களை காப்பாற்ற கூச்சல் போடவே அங்கிருந்த மீனவர்கள் சிலர் கடலில் இறங்கி இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்தனர். நவீனை மட்டும் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.

சந்தோஷ் ராட்சத அலையில் அலையில் சிக்கி மாயமானார். ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்ட சந்தோஷை மீனவர்கள் படகு மூலம் தேடி வருகின்றனர்.

இது குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், சப்- இன்ஸ்பெக்டர் குப்புசாமி ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்