எதிர்கட்சியினரை மத்திய அரசு சி.பி.ஐ. மூலம் மிரட்டுவது வழக்கமான ஒன்று தான் - தி.மு.க. பொது செயலாளர் துரைமுருகன் பேட்டி

எதிர்கட்சியினரை மத்திய அரசு சி.பி.ஐ. மூலம் மிரட்டுவது வழக்கமான ஒன்று தான் என்று வேலூரில் தி.மு.க. பொதுசெயலாளர் துரைமுருகன் கூறினார்.

Update: 2020-09-29 06:00 GMT
வேலூர், 

மத்திய அரசு நிறைவேற்றி உள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், அதற்கு துணை போகும் அ.தி.மு.க. அரசை கண்டித்தும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி, வேலூர் மாநகர தி.மு.க. செயலாளர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ.ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. பொதுசெயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-

தி.மு.க. பொதுசெயலாளராக பொறுப்பேற்ற பின்னர் முதல் நிகழ்ச்சியாக வேலூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறேன். நான் பிறந்து வளர்ந்த மண்ணில் விவசாயிகளுக்காக நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதை பெருமையாக கருதுகிறேன். மத்திய அரசு நிறைவேற்றி உள்ள 3 வேளாண் சட்டங்கள் குழப்பங்கள் நிறைந்ததாகும். ஒரு சட்டம் நிறைவேற்றுவதற்கு முன்பாக அதன் நிறை, குறைகள் பற்றி மக்களிடம் எடுத்து சொல்லி பின்னர் நிறைவேற்றப்படும். ஆனால் இந்த சட்டங்கள் முறை தவறிய வழியில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஒரு சட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால் சபையில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மசோதா கொண்டு வர வேண்டும். அப்போது அதுகுறித்து சபையின் உறுப்பினர்கள் விவாதம் செய்வார்கள். பின்னர் அந்த சட்டம் குறித்து சபையில் ஆதரவு, எதிர்ப்பு வாக்கெடுப்பு நடத்துவார்கள். அதில் ஆதரவு அதிகமாக இருந்தால் அந்த சட்டம் நிறைவேற்றப்படும்.

ஆனால் நாடாளுமன்றத்தில் அகாலிதள கட்சியை சேர்ந்த வேளாண்மைத்துறை பெண் மந்திரி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியை ராஜினாமா செய்தார். பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியை சேர்ந்த பீகார் மாநில முதல்-மந்திரி உள்பட 7 மாநில முதல்-மந்திரிகள் இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நாடாளுமன்றத்தில் வாக்கெடுத்தால் தோற்று விடும் என்று பயந்துபோய் அவசர அவசரமாக சட்டத்தை நிறைவேற்றினார்கள். ராஜ்யசபாவில் யாரையும் பேச விடாமல் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒளிவு, மறைவு இல்லாதது, விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் சட்டம் என்றால் ஏன் வேகமாக நிறைவேற்றினார்கள்.

செல்போன் சேவையில் ஜியோ நிறுவனம் வந்த பின்னர் பி.எஸ்.என்.எல். நிறுவனம் இருக்கும் இடமே தெரியாமல் போனது. அதுபோன்றது தான் இந்த சட்டமும். தற்போது நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் அதனை மூட்டைகளாக ஒழுங்குமுறை கூடங்களில் விற்பனை செய்து வருகிறார்கள். இந்த சட்டம் வந்தால் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் அருகே தனியார் நிறுவனத்தினர் கடை திறந்து அதிக விலைக்கு நெல்மூட்டைகளை வாங்குவார்கள். அதனால் விவசாயிகள் அங்கு கொண்டு போய் நெல்மூட்டைகளை கொடுப்பார்கள். அதன்காரணமாக ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூடப்படும். அதன்பின்னர் தனியார் நிறுவனத்தினர் குறைந்த விலைக்கு நெல் மூட்டைகளை வாங்குவார்கள். வெங்காயம், பருப்பு உள்ளிட்ட பொருட்களை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும். அவற்றை தனியார் நிறுவன முதலாளிகள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், மத்திய அரசின் விவசாய சட்டங்களால் விவசாயிகள் பாதிப்படைவார்கள் என்று எதிர்கட்சிகள் மட்டும் சொல்லவில்லை. பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகளும் சொல்கின்றன. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது என்பது தமிழக அரசின் முடிவு. இதுகுறித்து எதுவும் கூற விரும்பவில்லை. மத்தியில் ஆளும் கட்சியினர் சி.பி.ஐ. மூலம் எதிர்கட்சியினரை மிரட்டுவது வழக்கமான ஒன்றுதான். சட்டமன்ற தேர்தலுக்கு தி.மு.க. ஏற்கனவே தயாராகி விட்டது. தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், வேலூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் டீக்காராமன், முன்னாள் அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய், ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் தயாநிதி, இந்திய கம்யூனிஸ்டு மாநகர செயலாளர் சிம்புதேவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஷான்பாஷா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் நீல.சந்திரகுமார், திராவிட இயக்க தமிழர் பேரவை மாநில துணை பொதுச்செயலாளர் சிங்கராயர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதே போல சத்துவாச்சாரி , மண்டித்தெரு பகுதிகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்