விவசாய மசோதாக்களை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
3 விவசாய மசோதாக்களை கண்டித்து மதுரையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
மதுரை,
மத்திய அரசு விவசாயம் தொடர்பான 3 மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா விவசாயிகளுக்கு பாதகமாக இருக்கிறது என்று தி.மு.க. உள்பட அதன் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர். அதன்படி இந்த ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அதில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பாக ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர், பெத்தானியாபுரம், ஆறுமுகசந்தி, முனிச்சாலை, அண்ணா நகர் பஸ் நிலையம், செல்லூர் 50 அடி ரோடு ஆகிய 6 இடங்களில் நடந்தது.
ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்புக்குழு தலைவர் கோ.தளபதி தலைமை தாங்கினார். வெங்கடேசன் எம்.பி. முன்னிலை வகித்தார். அதில் எஸ்ஸார் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது விவசாய மசோதாக்களை திரும்ப பெற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
பெத்தானியாபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ., அண்ணா நகர் பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் குழந்தைவேலு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.