கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயன்றனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-09-29 05:15 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை வழக்கம் போல மனு கொடுப்பதற்காக பொதுமக்கள் சிலர் வந்தனர். தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட போலீசார் அறிவுறுத்தி வந்தனர். மேலும் கலெக்டர் அலுவலக பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஒரு பெண் உள்பட 4 பேர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் திடீரென்று தாங்கள் வைத்திருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் விரைந்து வந்து அவர்களை தடுத்து காப்பாற்றினார்கள். மேலும் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினார்கள். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னசந்திரம் அருகே நெடுசாலை கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் என தெரிய வந்தது.

அப்போது வினோத்குமார் கூறியதாவது:-

நான் ஓசூரில் உள்ள தனியார் வர்த்தக நிறுவனத்தில் 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தேன். திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் மற்றும் பூசாரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இருவரும் இந்த நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேர்ந்தனர். இந்த நிலையில் அந்த வர்த்தக நிறுவனம் நஷ்டம் அடைந்ததாக கூறி நிறுவனத்தை மூடி விட்டதுடன் அதனை நடத்தி வந்தவர்கள் தலைமறைவாகிவிட்டனர். நிறுவனம் மூடப்பட்டதால் புதிதாக இணைந்த சாமிநாதன் மற்றும் சீனிவாசனுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறி என்னிடம் இழப்பீடு கேட்டு தகராறு செய்தனர்.

நான் இது தொடர்பாக குருபரப்பள்ளி போலீசில் புகார் தெரிவித்தேன். இதையடுத்து போலீசார் சமாதானம் செய்து வைத்தனர். ஆனாலும் தொடர்ந்து சீனிவாசன், சாமிநாதன் தரப்பினர் என்னை மிரட்டி வந்தனர். மேலும் எங்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.1 லட்சம், 10 பவுன் நகைகளை எடுத்து சென்று விட்டனர். மேலும் 2 கறவை மாடுகளையும் அவர்கள் பிடித்து சென்று விட்டனர். இதனால் மனஉளைச்சலில் நானும், எனது தந்தை முருகேசன், தாய் எல்லம்மாள், சகோதரர் ஆகியோர் தீக்குளிக்க முயன்றோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அவர்களை கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்