போதைப்பொருள் விவகாரத்தில் கைது: நடிகைகளின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி - பெங்களூரு சிறப்பு கோர்ட்டு பரபரப்பு உத்தரவு

போதைப்பொருள் விவகாரத்தில் கைதாகி சிறையில் இருக்கும் நடிகைகள் ராகிணி, சஞ்சனாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து பெங்களூரு சிறப்பு கோர்ட்டு பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2020-09-28 23:53 GMT
பெங்களூரு,

பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் கன்னட திரை உலகில் விருந்து நிகழ்ச்சிகளில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, இவர்களது நண்பர்கள் ரவிசங்கர், ராகுல், போதைப்பொருள் விற்பனையாளர்கள் வீரேன் கண்ணா, லோயம் பெப்பர் சம்பா உள்பட 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 14 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட தயாரிப்பாளரும், நடிகை ராகிணி திவேதியின் நண்பருமான சிவப்பிரகாஷ், முன்னாள் மந்திரியின் மகன் ஆதித்யா ஆல்வா, சேக் பாசில், வினய்குமார் உள்ளிட்டோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

இதற்கிடையில், போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகை ராகிணி திவேதியின் போலீஸ் காவல் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த 14-ந் தேதியும், நடிகை சஞ்சனா கல்ராணி கடந்த 16-ந் தேதியும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபோல, கைதான வீரேன் கண்ணா, ரவிசங்கர், ராகுல் உள்ளிட்டோரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். அதே நேரத்தில் சிறைவாசம் அனுபவித்து வரும் நடிகைகள், தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி பெங்களூரு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு கோர்ட்டில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி சீனப்பா முன்னிலையில் நடைபெற்று வந்தது. கடந்த 24-ந் தேதி நடந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை 28-ந் தேதிக்கு (அதாவது நேற்று) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, நீதிபதி முன்னிலையில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணியின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “நடிகைகள் 2 பேரும் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது மற்றும் விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அவர்களிடம் அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது. போதைப்பொருள் விவகாரம் தொடர்பான விசாரணை இன்னும் நிறைவு பெறாததால், நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணிக்கு ஜாமீன் வழங்க கூடாது. ஜாமீன் வழங்கினால் மீண்டும் அவர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவார்கள், சாட்சிகளை அழிக்க வாய்ப்புள்ளது“ என்று வாதிட்டார்.

ஆனால் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபணமாகாததாலும், அவர்களுக்கும் போதைப்பொருட்கள் விவகாரத்திற்கும் தொடர்பு இல்லாத காரணத்தால், 2 பேருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவர்களது தரப்பு வக்கீல்கள் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சீனப்பா, நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணியின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து பரபரப்பு உத்தரவு பிறப்பித்தார். மேலும் நடிகைகளின் நீதிபதி மன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதன் காரணமாக நேற்று தங்களுக்கு ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் அவர்கள் இன்னும் 14 நாட்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சிறப்பு கோர்ட்டு ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளதால், கர்நாடக ஐகோர்ட்டில் ஜாமீன் கோரி 2 நடிகைகளும் விரைவில் மனுக்கள் தாக்கல் செய்ய உள்ளனர்.

இதுபோல, போதைப்பொருள் விவகாரத்தில் கைதாகி உள்ள நடிகை சஞ்சனா கல்ராணியின் நண்பரான ராகுலின் ஜாமீன் மனுவையும் நேற்று தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதுபோல, நடிகை ராகிணி திவேதியின் நண்பர் ரவிசங்கரின் ஜாமீன் மீதான விசாரணை 30-ந் தேதிக்கும், போதைப்பொருள் விற்பனையாளர் வீரேன் கண்ணாவின் ஜாமீன் மீதான விசாரணையை வருகிற 1-ந் தேதிக்கு தள்ளிவைத்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

`````````

மேலும் செய்திகள்