மத்திய-மாநில அரசுகளின் புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து பெங்களூருவில் காங்கிரசார் தர்ணா - கவர்னரை சந்தித்து மனு கொடுத்தனர்

மத்திய-மாநில அரசுகளின் புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் சார்பில் தர்ணா போராட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. மேலும் காங்கிரசார், இதுதொடர்பாக கவர்னரை சந்தித்து மனு கொடுத்தனர்.

Update: 2020-09-28 23:44 GMT
பெங்களூரு,

மத்திய-மாநில அரசுகளின் புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் சார்பில் தர்ணா போராட்டம் பெங்களூரு ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் பவனில் நேற்று நடைபெற்றது. மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த கூட்டத்தில் டி.கே. சிவக்குமார் பேசும்போது கூறியதாவது:-

மத்திய-மாநில அரசுகள் விவசாயிகளுக்கு எதிராக புதிய வேளாண் சட்டங்களை கொண்டுவந்துள்ளது. இதனால் விவசாயிகளின் உரிமை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சட்டங்களை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. இதற்கு எதிராக நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவாக நாம் நிற்க வேண்டும்.

இந்த சட்டத்திற்கு எதிராக நாம் கையெழுத்து இயக்கம் தொடங்க முடிவு செய்துள்ளோம். கர்நாடகத்தில் 6 கோடிக்கும் மேல் மக்கள் இருக்கிறார்கள். நமது கட்சியை சேர்ந்த வட்டார தலைவர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் இந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கையெழுத்து பெற்று கட்சியின் மாநில தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த கையெழுத்து அடங்கிய தொகுப்பு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த பணியை நமது கட்சியினர் சிறப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும். மேலும் கர்நாடகத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி. தேஜஸ்வி சூர்யா, பெங்களூரு பயங்கரவாதிகளின் மையமாக திகழ்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பெங்களூரு அதிக கல்வி நிறுவனங்களை கொண்டுள்ள நகரம். தரமான என்ஜினீயர்கள் இங்கு உருவாக்கப்படுகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் நமது நகரை பற்றி ஒரு தவறான கருத்தை தெரிவித்துள்ளார். இதை ஏற்க முடியாது. நமது மாநிலம் கலாசாரங்களை கொண்டது. நாம் உயிர் கொடுத்தாவது நமது மாநிலத்தை காக்க வேண்டும். அவரது இந்த கருத்தை கண்டித்து போராட்டம் நடத்துவோம். இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.

அதன் பின்னர் மாலையில் கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலாவை நேரில் சந்தித்து புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒரு கடிதத்தை காங்கிரஸ் தலைவர்கள் வழங்கினர்.

மேலும் செய்திகள்