விவசாயம் செழிக்க புரவி எடுத்த கிராம மக்கள்

விவசாயம் செழிக்க வேண்டி புரவி எடுத்து கிராம மக்கள் சிறப்பு பூஜை செய்தனர்.

Update: 2020-09-28 04:43 GMT
சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் அமைந்துள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் ஆண்டு தோறும் 2 முறை புரவி எடுப்பு விழா நடத்தப்படுவது வழக்கம். வைகாசி மாதம் புஞ்சை விவசாயம், புரட்டாசி மாதம் நஞ்சை விவசாயம் செழிக்க புரவி எடுப்பு விழாவை கிராமத்தினர் நடத்தி வருகின்றனர்.

தற்போது கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் புரட்டாசி மாத புரவி எடுப்பு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக சிங்கம்புணரி குலாலர் தெருவில் உள்ள மண்குதிரை செய்யும் குலாலர்களிடம் பிடிமண் கொடுக்கப்பட்டது. இதையடுத்து குலாலர் தெருவில் உள்ள புரவி பொட்டலில் 6 அடி உயரம் உள்ள மண் புரவி தயாரானது.

இந்தநிலையில் புரட்டாசி மாதம் 2-வது ஞாயிற்றுக் கிழமையான நேற்று மாலை கிராமத்தினர் ஒன்றிணைந்து புரவி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குலால சிவாச்சாரியார்கள், பூஜகர்கள் புரவிக்கு சிறப்பு பூஜை செய்து புரவியை சுமந்து பக்தர்கள் ஊர்வலமாக சந்திவீரன் கூடத்துக்கு கொண்டுவந்தனர். அங்கு கிராம மக்கள் சிறப்பு பூஜை செய்தனர்.

சிறப்பு பூஜை

அதைத்தொடர்ந்து சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் இருந்து புறப்பட்ட வெண்புரவி சந்தி வீரன் கூடம் வந்து சேர்ந்தவுடன் 2 புரவிகளும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலை அடைந்தன. அப்போது விவசாயம் செழிக்க நெல், நிலக்கடலை, கரும்பு உள்ளிட்ட விவசாய பயிர்கள் செழித்து வளரவும், மழை நன்கு பெய்யவும் சிறப்பு பூஜை நடந்தது.

விழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்