புதிதாக 372 பேருக்கு தொற்று புதுவையில் கொரோனாவுக்கு 13 பேர் பலி

புதுவையில் நேற்று கொரோனாவுக்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 372 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது.

Update: 2020-09-28 00:36 GMT
புதுச்சேரி,

புதுவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 623 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 372 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் 443 பேர் குணமடைந்து உள்ளனர். 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 71 ஆயிரத்து 561 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 679 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 26 ஆயிரத்து 400 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களில் 5 ஆயிரத்து 239 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். அதாவது 1,816 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 3 ஆயிரத்து 423 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 20 ஆயிரத்து 648 பேர் குணமடைந்துள்ளனர்.

புதுவையில் இதுவரை 513 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 435 பேர் புதுச்சேரியை சேர்ந்தவர்கள். 37 பேர் காரைக்காலையும், 41 பேர் ஏனாமையும் சேர்ந்தவர்கள் ஆவர். புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருங்கப்பாக்கம் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்த 81 வயது முதியவரும், தர்மாபுரி நடுத்தெருவை சேர்ந்த 55 வயது பெண்ணும், முத்தியால்பேட்டை சோலைநகரை சேர்ந்த 80 வயது முதியவரும், மதகடிப்பட்டு கோகுலம் நகர் 8-வது குறுக்கு தெருவை சேர்ந்த 60 வயது ஆணும் பலியாகி உள்ளனர். ஜிப்மரில் அண்ணாநகர் 8-வது குறுக்கு தெருவை சேர்ந்த 55 வயது பெண்ணும், வாணரப்பேட்டை பகுதியை சேர்ந்த 30 வயது ஆணும், புது சாரம் கவிக்குயில் நகரை சேர்ந்த 55 வயது பெண்ணும் பலியாகி உள்ளனர்.

இதேபோல் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் சிகிச்சை பெற்று வந்த அரியூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 65 வயது முதியவரும், கிருமாம்பாக்கம் இளங்கோ நகரை சேர்ந்த 44 வயது ஆணும், இருளஞ்சந்தையை சேர்ந்த 75 வயது முதியவரும் உயிரிழந்துள்ளனர். காரைக் கால் அரசு மருத்துவமனையில் காரைக்காலை சேர்ந்த 62 வயது முதியவரும், கிராம்பு தோட்டத்தை சேர்ந்த 63 வயது முதியவரும், சேத்தூர் மேலத்தெருவை சேர்ந்த 53 வயது பெண்ணும் பலியாகி உள்ளனர். புதுவையில் உயிரிழப்பு 1.94 சதவீதமாகவும், குணமடைவது 78.21 சதவீதமாகவும் உள்ளது.

இவ்வாறு சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் கூறினார்.

இந்த நிலையில் கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் சுகாதாரத்துறை மூலம் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்