மார்க்கெட்டுகளில் கொரோனா அச்சமின்றி மக்கள் கூட்டம் போலீசார் எச்சரிக்கை

அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கொரோனா அச்சமின்றி புதுவை மார்க்கெட் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. போலீசார் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை செய்தனர்.

Update: 2020-09-28 00:33 GMT
புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்காததால்தான் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய நிபுணர்கள் குழு எச்சரிக்கை விடுத்தது.

இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசின் விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, மாவட்ட கலெக்டர் அருண் ஆகியோர் நாள்தோறும் வலியுறுத்தி வருகின்றனர். மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில் உள்ளூர் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.

அரசின் உத்தரவின்பேரில் போலீசார் ஆங்காங்கே வாகன சோதனைகள் நடத்தி சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கும், முக கவசம் அணியாதவர்களுக்கும் அபராதம் விதித்து வருகின்றனர். தற்போது புரட்டாசி மாதம் என்பதால் இந்துக்கள் பெரும்பாலானோர் அசைவத்தில் இருந்து சைவ உணவுகளுக்கு மாறி உள்ளனர். இதனால் விடுமுறை நாளான நேற்று புதுவையில் இறைச்சி, மீன் கடைகளில் மக்கள் கூட்டம் குறைந்த அளவே இருந்தது.

நெல்லித்தோப்பு மார்க்கெட், புதிய பஸ் நிலையத்தில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட், உழவர்சந்தை, லாஸ்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வழக்கத்தை விட நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக அலைமோதியது. அவர்கள் கொரோனா குறித்த எந்தவித அச்சமுமின்றி சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு கூட்டமாக நின்று காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்களை வாங்கிச் சென்றனர்.

அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பொதுமக்களை ஒலிப்பெருக்கி மூலம் எச்சரித்தனர். முககவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் செய்திகள்