புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2020-09-27 11:44 GMT
கரூர்,

கரூர் தாந்தோன்றிமலை பகுதியில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் பழமைவாய்ந்ததும், பிரசித்தி பெற்றதுமான கல்யாண வெங்கடரமணசாமி பெருமாள் கோவில் உள்ளது. நேற்று புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி அந்த கோவிலில் பெருமாளுக்கு பால், பன்னீர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பூக்களால் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டு சென்றனர்.

வேலாயுதம்பாளையம்

வேலாயுதம்பாளையம் புன்செய்தோட்டக்குறிச்சி அருகே உள்ள ஒரத்தை சேங்கல்மலையில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையொட்டி பெருமாளுக்கு புனிதநீரால் நீராற்றப்பட்டது.

பின்னர் பெருமாளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, திருமஞ்சனம் உள்ளிட்டவைகளை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் துளசி மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

குளித்தலை

குளித்தலையில் உள்ள நீலமேகப்பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இக்கோவிலில் உள்ள மூலவர் முதல் அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் குளித்தலையில் உள்ள லெட்சுமிநாராயண பெருமாள் கோவில் உள்பட குளித்தலையை சுற்றியுள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.

நொய்யல்

நொய்யல் அருகே கோம்புபாளையம் சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. அபிஷேகத்தை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்தக் குடங்களுக்கு சிறப்பு பூஜை செய்து பின்னர் தீர்த்தக் குடங்களுடன் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் சீனிவாச பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து சீனிவாச பெருமாளை தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்