புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.;

Update: 2020-09-27 09:29 GMT
புதுக்கோட்டை,

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்ததாகும். இந்த மாதத்தில் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி புரட்டாசி மாதத்தில் நேற்று 2-வது சனிக்கிழமையையொட்டி புதுக்கோட்டையில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கீழ 3-ம் வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று காலை வரதராஜ பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். உற்சவர் கருட சேவையில் காட்சியளித்தார். கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை கோவிலில் கடைப்பிடிக்கப்பட்டன. இலவச தரிசனத்திற்கு தனி வழியும், கட்டண தரிசனத்திற்கு தனிப்பாதையும் என தடுப்புகளுடன் அமைக்கப்பட்டிருந்தன.

இதேபோல விட்டோபா பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் பலர் சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கோகர்ணம் பெருமாள் கோவிலிலும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர். மேலும் புதுக்கோட்டை நகரில் ஆங்காங்கே உள்ள பெருமாள் கோவில்களிலும், ஆஞ்சநேயர் கோவிலிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

வடகாடு

வடகாடு அருகே உள்ள ஆலங்காடு வெங்கிடாசலபதி கோவிலில் உள்ள பெருமாளுக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

ஆதிகேசவ பெருமாள்

மணமேல்குடியை அடுத்த பொன்னகரம் கிராமத்தில் ஸ்ரீதேவி பூதேவி உடனாய ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி ஆதிகேசவ பெருமாளுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்