மீன்சுருட்டி பகுதியில் வாரச்சந்தைகள் செயல்படாததால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் வியாபாரிகள்

மீன்சுருட்டி பகுதியில் வாரச்சந்தைகள் செயல்படாததால் வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.

Update: 2020-09-27 08:52 GMT
மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று மாட்டு சந்தை மற்றும் காய்கறி சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த பகுதியில் நடைபெறும் மாட்டு சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு வகையான காளை மாடுகள், எருதுகள் மற்றும் கறவை மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது உண்டு. வளர்ப்பு மாடுகள் மட்டுமின்றி இறைச்சிக்காகவும் மாடுகள் விற்பனை செய்யப்படும்.

கேரளாவில் இருந்து வியாபாரிகள் இந்த சந்தைக்கு வந்து இறைச்சிக்காக மாடுகளை வாங்கி செல்வது வழக்கம். ஒவ்வொரு வாரமும் குறைந்தது சுமார் ரூ.1 கோடி அளவில் வியாபாரம் நடைபெறும். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் வாரச்சந்தைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. மேலும் காய்கறிகள் விற்பனை செய்யும் வாரச்சந்தையும் மூடப்பட்டது.

வாழ்வாதாரம் பாதிப்பு

இதேபோல் ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையில் நடைபெறும் ஆட்டுச்சந்தை மற்றும் காய்கறிகள் சந்தையும் மூடப்பட்டது. இதனால் பல விவசாயிகள், வியாபாரிகள், குறிப்பாக இடைத்தரகர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். ஒவ்வொரு வாரமும் வாரச்சந்தை மூலம் கிடைக்கும் குறைந்த பணத்தை வைத்துதான் அவர்கள் குடும்பத்தை நடத்தி வந்தனர்.

சுமார் 6 மாத காலமாக வாரச்சந்தை மூடப்பட்டதால், அவர்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக பல்வேறு பகுதிகளில் மூடப்பட்ட சந்தைகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. எனவே வியாபாரிகள், இடைத்தரகர்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி மீன்சுருட்டி பகுதியில் மீண்டும் வாரச்சந்தைகள் செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்