கச்சிராயப்பாளையம் அருகே சாராயம் காய்ச்ச முயன்ற 3 பேர் கைது

கச்சிராயப்பாளையம் அருகே சாராயம் காய்ச்ச முயன்ற 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-09-26 22:15 GMT
கச்சிராயப்பாளையம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே மாத்தூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக கச்சிராயப்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் காட்டுக்கொட்டாய் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கே 3 பேர் சாராயம் காய்ச்சுவதற்காக 200 லிட்டர் கொள்ளவுள்ள 4 பேரல்களில் சாராய ஊறலை ஊற்றி சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்ததை கண்டுபிடித்து அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில் அவர்கள் எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி(வயது 60) இவரது தம்பிகள் திருமால்(55) சிவமூர்த்தி(42) என்பதும், மலைப்பகுதியில் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கெடுபிடி அதிகமாக இருந்ததால் கச்சிராயப்பாளையம் நகர் பகுதி அருகே உள்ள காட்டுப்பகுதியில் சாராயம் காய்ச்ச இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அண்ணன், தம்பிகள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சாராயம் காய்ச்சுவதற்காக 4 பேரல்களில் வைத்திருந்த 800 லிட்டர் சாராய ஊறலையும் பறிமுதல் செய்து அவற்றை அழித்தனர். இதுவரை கல்வராயன் மலையில் மட்டுமே சாராயம் காய்ச்சி வந்த மர்ம நபர்கள் தற்போது கச்சிராயப்பாளையம் நகரை ஒட்டியுள்ள பகுதிகளிலும் சாராயம் காய்ச்சும் பணியை தொடங்கி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்