கொட்டாம்பட்டி பகுதிகளில், விவசாய பயிர்களை ஆய்வு செய்த புள்ளியியல் துறை அதிகாரிகள் - மகசூல் நிலவரத்தை கணக்கிட்டனர்
கொட்டாம்பட்டி பகுதியில் விவசாய பயிர்களை ஆய்வு செய்த புள்ளியியல் துறை அதிகாரிகள் மகசூல் அளவை கணக்கீடு செய்தனர்.
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி பகுதிகளில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் சார்பில் நேற்று புள்ளியியல் மற்றும் பொருளியல் துறை அதிகாரிகள் வேளாண்துறை கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் வேளாண் விளைச்சல் சாகுபடியை பரிசோதனை செய்து கணக்கீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். நெல், கடலை, தென்னை, பழ வகைகள் என தரம் பிரித்து 4 வகையான பரிசோதனைகளை புள்ளியியல் துறை மாவட்ட துணை இயக்குனர் சுந்தர்ஆனந்த் தலைமையில் பரிசோதனை செய்து கணக்கீட்டனர்.
அய்யாபட்டியிலுள்ள விவசாயி ஒருவரின் நிலத்தில் மானாவாரியாக பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலையை 5-க்கு 5 மீட்டர் தூரம் 4 பக்கங்களிலும் அளவீடு செய்து அதில் விளைந்த பயிர்களை அறுவடை செய்து அதில் பறித்த நிலக்கடலையை எடை போட்டு சோதனை செய்தனர். அப்போது அவை 7 கிலோ வீதம் கிடைக்கப்பெற்றது. இதனை நல்ல மகசூல் என தெரிவித்த அதிகாரிகள் இதனை 400 ஆல் பெருக்கினால் கிடைக்கும் விடையை 1 எக்டர் வரையிலான மகசூலாக எடுத்துகொள்ளலாம் என அப்போது தெரிவித்தனர்.
அதேபோல் தென்னை விவசாயத்துக்கு 10 மீட்டர் அகலம், 10 மீட்டர் நீளம் அளவாக கொண்டு தேங்காய் எண்ணிக்கை அடிப்படையில் 200-ஆக பெருக்கினால் மகசூல் நிலவரம் தெரியவரும். பயிர் வகைகளுக்கு 10 மீட்டர் நீளம், 5 மீட்டர் அகலம் என கணக்கீடு செய்து மகசூல் குறித்த நிலவரம் தெரியவரும் என்றனர்.
மேலும் நாட்டின் உற்பத்தியை கணிக்கும் வகையில் பயிர் அறுவடை பரிசோதனை மேற்கொள்வதாக தெரிவித்தனர். நேற்று நடைபெற்ற புள்ளியியல் ஆய்வு பணியின் போது வருவாய்துறை, வேளாண்துறை அலுவலர்களும் உடனிருந்தனர்.