பவானிசாகர் அணை நீர்மட்டம் 102 அடியை எட்டியது - விவசாயிகள் மகிழ்ச்சி

பவானிசாகர் அணை 102 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2020-09-27 00:25 GMT
புஞ்சைபுளியம்பட்டி,

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. அணையின் நீர்மட்ட உயரம் 105 அடி ஆகும். அணைக்கு மோயாறும் மேட்டுப்பாளையம் பவானிஆறும் நீர் வரத்தாக உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சியில் பெய்த கனமழையால் கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியது.

இதனால் பில்லூர் அணையில் இருந்து உபரிநீரானது மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதன்காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததுடன், நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து 101 அடியை தாண்டியது. இந்த நிலையில் மழை பெய்வது குறைந்ததால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்தது.

நேற்று முன்தினம் மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 186 அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 101.95 அடியாக இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2 ஆயிரத்து 300 கன அடியும், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்காலில் 850 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

நேற்று மாலை 6 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 101.97 அடியாக இருந்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 172 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2 ஆயிரத்து 300 கன அடியும், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்காலில் 850 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 102 அடியை எட்டும் நிலையில் பவானிசாகர் அணை உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்