அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி
அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
அந்தியூர்,
அந்தியூர் அருகே 160 ஏக்கர் பரப்பளவிலான எண்ணமங்கலம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர்மட்ட உயரம் 11 அடி ஆகும். பர்கூர் மலைப்பகுதியில் உள்ள ஈரெட்டி, மின்தாங்கி, தேவர்மலை, மடம் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழை நீரானது செலம்பூரம்மன் ஓடை வழியாக எண்ணமங்கலம் ஏரியை வந்தடைகிறது. இந்த ஏரியின் தண்ணீர் மூலம் நேரடியாக எண்ணமங்கலம், வெள்ளித்திருப்பூர், மாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் ஏரியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளம் மற்றும் கிணறுகளில் நீர்மட்டம் உயர்வதன் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த 700 ஏக்கர் நிலங்கள் மறைமுகமாக பாசன வசதி பெறுகின்றன.
இந்த நிலையில் பர்கூர் மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக எண்ணமங்கலம் ஏரிக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. இதனால் நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 5.50 அடியாக உயர்ந்தது.
பர்கூர் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் எண்ணமங்கலம் ஏரி விரைவில் நிறைந்துவிடும் என அந்தியூர் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சுலைமான் தெரிவித்து உள்ளார். அதுமட்டுமின்றி ஏரிக்கு வரும் நீரின் அளவை தொடர்ந்து கண்காணித்து வருவதாவும் அவர் தெரிவித்து உள்ளார்.
எண்ணமங்கலம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதுடன், விரைவில் நிரம்பிவிடும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.