பணிகள் நடப்பதில் சிக்கல் இல்லை: ரிங்ரோடு நில உரிமையாளர்களுக்கு கோர்ட்டு மூலம் இழப்பீடு தொகை - நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்
பணிகள் நடப்பதில் சிக்கல் இல்லை ரிங்ரோடு நில உரிமையாளர்களுக்கு கோர்ட்டு மூலம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.;
ஈரோடு,
ரிங்ரோடு பணிக்கான நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரத்தில் 5 இடங்களில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மொத்தம் உள்ள சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்தில் 1 கிலோ மீட்டர் அளவுக்கு மட்டுமே நில உரிமையாளர்கள் வழக்கு போட்டு இருந்தனர். இந்த வழக்குகள் அனைத்துக்கும் கோர்ட்டு மூலம் தீர்வு காணப்பட்டது.
இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் உதவி பொறியாளர் ஆர்.அரவிந்த் கூறியதாவது:-
புத்தூர் புதுப்பாளைம் கிராம பகுதியை சேர்ந்த நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்குவது தொடர்பாக கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து வருவாய்த்துறை மூலம் அவர்களுக்கு உரிய தொகை கோர்ட்டில் செலுத்தப்பட்டு விட்டது. இந்த தகவலை 24-ந் தேதி நில உரிமையாளர்களுக்கு தெரிவித்து விட்டோம். எனவே தற்போது பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது. பணிகள் நடைபெறுவதில் எந்த சிக்கலும் இனிமேல் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று சம்பந்தப்பட்ட பகுதியில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் நிலம் சமப்படுத்தும் பணிகள் நடந்தன.