வாலாஜாபாத் அருகே, மோட்டார் சைக்கிள்-கார் மோதல்; வாலிபர் பலி
வாலாஜாபாத் அருகே மோட்டார் சைக்கிள்- கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் தாலுகா திம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் கண்ணதாசன் (வயது 32). ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அவர் தொழிற்சாலைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வாலாஜாபாத் வழியாக ஒரகடம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
வாலாஜாபாத் அருகே மதுரா நத்தாநல்லூர் பகுதியில் செல்லும்போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் கண்ணதாசன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்ணதாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.