நிலத்தடி நீர் ஆதாரமான ஒண்டிப்புலி கல்குவாரியை சீரமைக்க சிறப்பு நிதி ஒதுக்கீடு தேவை

விருதுநகருக்கான நிலத்தடி நீர் ஆதாரமான ஒண்டிப்புலி கல்குவாரியை சீரமைக்க சிறப்பு ஒதுக்கீடு கிடைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Update: 2020-09-26 22:39 GMT
விருதுநகர்,

விருதுநகர் பகுதியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வருதற்கு முன்னர் நிலத்தடி நீர் ஆதாரமே குடிநீர் வினியோகத்துக்கு பயன்பட்டு வந்தது. குடிநீர் தேவையை சமாளிக்க கடந்த 1988-ம் ஆண்டு நகரசபை தலைவராக இருந்த சொக்கர், விருதுநகர் அருகே ஒண்டிப்புலியில் தனியார் சிமெண்டு ஆலைக்கு சொந்தமான கல்குவாரியில் இருந்து லாரிகள் மூலம் குடிநீர் எடுக்க ஏற்பாடு செய்தார்.

இதனை தொடர்ந்து 1989-ம் ஆண்டு சிமெண்டு ஆலை நிறுவனம் கல்குவாரியை விருதுநகர் நகராட்சியிடம் ஒப்படைத்துவிட்ட நிலையில் கல்குவாரியில் இருந்து குடிநீர் எடுக்கும் திட்டத்தினை அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி தொடங்கி வைத்தார்.

இக்கல்குவாரியில் இருந்து தினசரி 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைத்து வந்த நிலையில் 4 வழிச்சாலை திட்டப்பணியால் கல்குவாரியில் இருந்து தண்ணீர் வருவது தடைப்பட்டது. சிஜிதாமஸ் வைத்யன் கலெக்டராக இருந்தபோது சாத்தூர் ரோட்டில் உள்ள ரெயில்வேகேட் அருகே தரைகீழ் தொட்டி அமைத்து கல்குவாரி தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்தார். இதனை தொடர்ந்து இந்த கல்குவாரிக்கு தண்ணீர் வருவதற்கு ஒண்டிப்புலி கண்மாயில் இருந்து வழி அமைக்க கலெக்டர் கிருஷ்ணன் ஏற்பாடு செய்தார்.

இந்த நிலையில் தற்போது விருதுநகர் பகுதியில் குடிநீர் பிரச்சினை கடுமையாக இருக்கும் நிலையில் ஒண்டிப்புலி கல்குவாரி வறண்டதால் அங்கிருந்து தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் ஆனைக்குட்டம் நீர் தேக்க பகுதி, தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் தண்ணீரை வைத்து குடிநீர் வினியோகத்தை சமாளித்து வருகிறது.

வறண்ட கல்குவாரியை சீரமைக்க நகராட்சி நிர்வாகத்திடம் போதுமான நிதி வசதி இல்லாத நிலையில் கல்குவாரியை சீரமைக்கும் பணியினை மேற்கொள்ள வேண்டிய நிலையில் தனியார் அமைப்புகள் முன்வந்த போதிலும் கல்குவாரியை தூர்வாரி முழுமையாக சீரமைக்க நிதி உதவி அதிக அளவில் தேவைப்படும் நிலை உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் விருதுநகர் அருகே உள்ள ஒண்டிப்புலி கல் குவாரியை சீரமைக்கவும் இந்தகல் குவாரிக்கு நீர் ஊற்றை அதிகரிக்க கூடிய ஒண்டிப்புலி கண்மாயை மராமத்து செய்யவும் சிறப்பு நிதி ஒதுக்கீட்டிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. குடிமராமத்து பணியில் ஒண்டிப்புலி கண்மாயையும் அதற்கு அடுத்தாற் போல் உள்ள சங்கரலிங்காபுரம் கண்மாயையும் மராமத்து செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்