நெல்லையில் பரிதாபம்: குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி தற்கொலை

நெல்லையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-09-27 00:00 GMT
நெல்லை,

நெல்லை தச்சநல்லூர் நல்மேய்ப்பர் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 35). இவர் கார்களுக்கு டிங்கரிங், பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி வடிவு (27). இவர்களுக்கு திருமணமாகி, 7 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை.

மேலும் வடிவுக்கு 3 முறை கருச்சிதைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது 4-வது முறையாக அவர் கர்ப்பம் அடைந்தார். 5 மாதங்கள் கடந்த நிலையில் எதிர்பாராத விதமாக வடிவு கீழே விழுந்ததில் மீண்டும் கருச்சிதைவு ஏற்பட்டது.

இதனால் கணவன்-மனைவி மிகவும் மனவேதனையில் இருந்துள்ளனர்.

குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் இருந்த இருவரும் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் படுக்கை அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

நேற்று காலையில் அவர்களது உறவினர் வீட்டிற்கு வந்தபோது 2 பேரும் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தச்சநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, 2 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்