நெல்லை நரசிங்கநல்லூரில் திருநங்கைகளுக்கு 30 புதிய வீடுகள் - அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்

நெல்லை நரசிங்கநல்லூரில் திருநங்கைகளுக்கு புதிய வீடுகளை அமைச்சர் ராஜலட்சுமி திறந்துவைத்தார்.;

Update: 2020-09-26 23:00 GMT
பேட்டை,

நெல்லை பேட்டை ருகே உள்ள நரசிங்கநல்லூர் தீன் நகரில் ஊரக வளர்ச்சி திட்ட முகமை மூலம் திருநங்கைகளுக்காக 30 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த வீடுகளின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது விழாவுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திரம் முன்னிலை வகித்தார்.

தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி புதிய வீடுகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு சாவிகளை வழங்கினார்.

இந்த விழாவில் நடமாடும் ரேஷன் கடை மற்றும் இரண்டு புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனங்களையும் அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அமைச்சர் ராஜலட்சுமி கூறுகையில் “திருநங்கைகள் நலன் மீது தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனி கவனம் செலுத்தி வருகிறார். இதையொட்டி நெல்லையில் திருநங்கைகளுக்கு புதிய வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திருநங்கைகளுக்கு சமுதாயத்தில் தனி மரியாதை கிடைக்கும். அவர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து வாழ்வில் முன்னேற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

அம்மா நடமாடும் ரேஷன் கடை திட்டத்தின்கீழ் நெல்லை மாவட்டத்தில் 64 நடமாடும் ரேஷன் கடைகளும், தென்காசி மாவட்டத்தில் 44 கடைகளும் செயல்படுத்தப்படுகிறது. இதில் அனைத்து வகையான ரேஷன் பொருட்களும் வழங்கப்படும். நெல்லை மாவட்டத்துக்கு கூடுதலாக இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது இதில் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் நவீன வசதிகளைக் கொண்டதாக அக்கவுண்டில் நிறுத்தி வைக்கப்படும் மற்றொரு வாகனம் மூன்றடைப்பு பகுதியில் தயார் நிலையில் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் இன்பதுரை எம்.எல்.ஏ., நெல்லை உதவி கலெக்டர் சிவகிருஷ்ணன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், மானூர் யூனியன் முன்னாள் தலைவர் கல்லூர் வேலாயுதம், நெல்லை சந்திப்பு கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிகோட்டை செல்லதுரை, நெல்லை தாசில்தார் பெருமாள், மானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் லயோலா ஜோசப் ஆரோக்கியதாஸ் மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்