பள்ளிகொண்டா பேரூராட்சியில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதித்து ரூ.10 ஆயிரம் வசூல்

பள்ளிகொண்டா பேரூராட்சியில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதித்து ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-09-26 22:15 GMT
அணைக்கட்டு, 

பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு உட்பட்ட 16 வார்டுகளில் 30 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். கொரோனா பரவல் நேரத்தில் முகக் கவசம் அணியாமல் சுற்றித் திரிவது, சமூக விலகலை கடைப்பிடிக்காமல் இருப்பது, கூட்டமாக சேர்வது, பொதுஇடங்களில் எச்சில் துப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்க வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம், பேரூராட்சி செயல் அலுவலருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி ஒரு வாரமாக பள்ளிகொண்டா பேரூராட்சியில் 3 பேர் கொண்ட குழு தீவிர கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டு, பொதுஇடம் மற்றும் மருந்துக்கடைகள், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகள், 102 தனி நபர்களுக்கு கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளை மீறியதாக மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர். அபராத தொகையை பேரூராட்சி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. பேரூராட்சியில் கொரோனா விதிமுறைகளை மீறுவோருக்கு தொடர்ந்து அபராதம் விதிக்கப்படும் என செயல் அலுவலர் மலர்மாறன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல் ஒடுகத்தூர் பேரூராட்சியில் சிறப்பு குழுவை அமைத்து, கொரோனா விதிகளை மீறும் நபர்களிடம் தொடர்ந்து, ஒடுகத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாதன் அபராதம் வசூலித்து வருகிறார். அதேபோல் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக 90 பேரிடம் இருந்து ரூ.18 ஆயிரம் வசூலித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்