பல்லடத்தில், செல்போன் திருடிய 3 வாலிபர்கள் கைது
பல்லடத்தில் செல்போன்களை திருடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பல்லடம்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பாச்சாங் காட்டுபாளையத்தில் வசிப்பவர்கள் ராம்குமார் (வயது 26), ரமணன் (24), இவர்கள் இருவரும் அருள்புரத்தில் தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், இவர்கள் வீட்டில் இருந்த 2 பேரின் செல்போன்களும் திருட்டு போனது. இவர்கள் அருகில் உள்ள வீடுகளில் விசாரித்த போது சந்தேகப்படும் வகையில் 3 பேர் வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்ததாக அவர்கள் கூறினர்.இதையடுத்து இருவரும் அக்கம்பக்கம் உள்ள பகுதிகளில் தேடி பார்த்தனர். அவர்களை காணவில்லை.
இந்தநிலையில் அருள்புரம் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை மடக்கிப் பிடித்து விசாரித்த போது, அவர்கள் வீடுகளில் புகுந்து செல்போன்களை திருடியதை ஒப்புக்கொண்டனர். பின்னர் அவர்களை தர்மஅடி கொடுத்து பல்லடம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த சமாதானப்பிரபு (20), நவீன்குமார் (22), முத்து (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களை பறிமுதல் செய்து, அவர்களை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.