நகரும் நியாய விலைக் கடை தொடக்க விழா: எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வினர் வாக்குவாதம்
படவேடு அருகே நகரும் நியாய விலைக்கடை தொடக்க விழா நடந்தது. அப்போது பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. முன்னிலையில் அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு பெருமாள்பேட்டை கிராமத்தில் படவேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை மூலம் ஜவ்வாது மலை கிராமங்களில் வசிக்கும் செண்பகத்தோப்பு கிராம மக்கள் 350 குடும்பத்தினருக்கு ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.
இதற்காக செண்பகத்தோப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையில் நேற்று பெருமாள்பேட்டை ரேஷன் கடை முன்பு அம்மா நகரும் நியாய விலை கடை தொடக்க விழா நடந்தது. வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நகரும் நியாய விலைக் கடை வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் படவேடு ஊராட்சி தலைவர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, ஒன்றிய கவுன்சிலர் தஞ்சம்மாள், முன்னாள் கவுன்சிலர்கள் ரகு, சீதாராமன், படவேடு ஊராட்சி முன்னாள் செயலாளர் அன்பழகன், கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் ஆறுமுகம், படவேடு ஊராட்சி முன்னாள் தலைவர் அப்புசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்தபின் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.விடம், படவேடு ஊராட்சியில் புகார் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்ட பணித்தள பொறுப்பாளரை மீண்டும் நியமனம் செய்ய வேண்டும் என அ.தி.மு.க.வினர் முறையிட்டனர். அதற்கு ஊராட்சி தலைவர் சீனிவாசன் மறுத்துவிட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றி ஆறுமுகம் என்பவர் ஊராட்சி தலைவர் சீனிவாசனை, எம்.எல்.ஏ. முன்னிலையில் அடிக்க பாய்ந்தார். அப்போது அங்கிருந்த கட்சியினர் அவரை தடுத்து விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சீனிவாசன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டதால் அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை.
அதைத்தொடர்ந்து பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக ரூ.58 லட்சத்தில் அன்னதான கூடம் கட்டும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செயல் அலுவலர் கார்த்திகேயனிடம் பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து கமண்டல நதிக்கரையில் முருகர் கோவிலுக்கு சொந்தமாமன இடத்தில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான இடத்தை எம்.எல்.ஏ. பார்வையிட்டார். பின்னர் முருகர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் மூலம் முதல்-அமைச்சரின் அனுமதி பெற்று புதிய பஸ் நிலையம் கட்டப்படும் என்றார்.
அப்போது போளூர் தாசில்தார் ஜெயவேலு, சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் கணபதி, கிராம நிர்வாக அதிகாரிகள் மகாலிங்கம், சம்பத் உள்பட பலர் உடன் இருந்தனர்.
முன்னதாக எம்.எல்.ஏ. ரேணுகாம்பாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.