புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் சாலை மறியல் - 26 பெண்கள் உள்பட 381 பேர் கைது
புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கடலூர் மாவட்டம் முழுவதும் விவசாய சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 26 பெண்கள் உள்பட 351 பேர் கைது செய்யப்பட்டனர்.;
கடலூர்,
அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம், வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம், விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் 2020 ஆகிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாய சங்கங்கள் சார்பில் 25-ந் தேதி மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கடலூரில் நேற்று காலை 10.30 மணி அளவில் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினரும், அவர்களுக்கு ஆதரவாக அனைத்து கட்சியினரும் ஜவான் பவன் சாலையில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் 11 மணி அளவில் அண்ணா பாலம் அருகே சாலையின் நடுவில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு மாவட்ட அமைப்பாளர் கோ.மாதவன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சந்திரசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், மாநில துணை செயலாளர் ஸ்ரீதர், நகர செயலாளர் செந்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் குளோப், தி.மு.க. பிரமுகரும், வி.ஆர்.அறக்கட்டளை நிறுவனருமான விஜயசுந்தரம் மற்றும் அனைத்து கட்சியினர் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரவன், மணிகண்டன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 59 பேரை கைது செய்து திருப்பாதிரிப்புலியூரில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதேபோல் விவசாய சங்க ஒழுங்கிணைப்பு குழு சார்பில் புவனகிரி, விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, பெண்ணாடம் உள்ளிட்ட 11 இடங்களில் சாலை மறியல் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக மொத்தம் 26 பெண்கள் உள்பட 381 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். புதிய வேளாண் மசோதா 2020-ஐ திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை கடலூர் அண்ணா பாலம் அருகில் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினர் நெல், கரும்பு, மரவள்ளி செடி உள்ளிட்ட விவசாய பயிர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஒருங்கிணைப்பாளர் வெண்புறா குமார் தலைமை தாங்கினார். மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலு, மக்கள் பாதை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ், அச்சக உரிமையாளர் சங்க மாவட்ட தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம் கு.பாலசுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரை ஆற்றினர். இதில் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுதொடர்பாக 49 பேரை திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கைது செய்தனர்.