இலவச மின் இணைப்பு வழங்க விவசாயியிடம் ரூ.27 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது - மயிலத்தில் போலீசார் அதிரடி

இலவச மின் இணைப்பு வழங்க விவசாயியிடம் ரூ.27 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.;

Update: 2020-09-25 22:15 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா மயிலத்தை அடுத்த கீழ்எடையாளம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசங்கர் (வயது 37), விவசாயியான இவர் மயிலம் பகுதியில் ஆட்டோவும் ஓட்டி வருகிறார். இவருக்கு சொந்தமாக கீழ்எடையாளத்தில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு மின் மோட்டார் அமைக்க, இலவச மின் இணைப்பு கேட்டு, கடந்த 2001-ல் திண்டிவனம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் பதிவு செய்தார். 19 வருடங்களுக்கு பிறகு பதிவுமூப்பு அடிப்படையில் பாலசங்கருக்கு இலவச மின் இணைப்பு வழங்க அரசால் ஆணை வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக திண்டிவனம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் இருந்து பாலசங்கருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில், மயிலம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் 3 மாதங்களுக்குள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விவசாய பயன்பாட்டிற்கு இலவச மின் இணைப்பு பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலசங்கர், உரிய ஆவணங்களுடன் மயிலம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த உதவி பொறியாளரான செஞ்சி நரசிங்கனூரை சேர்ந்த புருஷோத்தமன்(33) என்பவரை அணுகினார். அப்போது இலவச மின் இணைப்பு வழங்க ரூ.27 ஆயிரம் தரும்படியும், பணம் கொடுத்தால் மட்டுமே இலவச மின் இணைப்பு வழங்க முடியும் என்று கறாராக கூறிய புருஷோத்தமன், பணத்தை மயிலத்தில் உள்ள அலுவலகத்திற்கு வந்து தன்னிடம் நேரில் கொடுக்கும்படி கூறினார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலசங்கர், இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். பின்னர் போலீசார் வழங்கிய அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய பணத்தை, செண்டூரில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு வெளியே வைத்து புருஷோத்தமனிடம் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கியபோது அங்கு ஏற்கனவே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு யுவராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், ஏட்டுகள் விஜயதாஸ், பாலமுருகன், நரசிம்மராவ் ஆகியோர் விரைந்து சென்று புருஷோத்தமனை மடக்கிப்பிடித்தனர்.

அதை தொடர்ந்து அவரிடமிருந்த முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய போலீசார், அவரை விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் புருஷோத்தமனை போலீசார் கைது செய்து விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்