நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது - சிறப்பு பூஜை செய்து வழிபாடு

நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதையொட்டி காவிரி அன்னைக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.;

Update: 2020-09-25 22:30 GMT
மேட்டூர்,

கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழகம் மற்றும் கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவை கடந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது. அதன் அடிப்படையில் கடந்த வாரம் கர்நாடகத்தில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடந்த 21-ந் தேதி முதல் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது.

அதிகபட்சமாக அணைக்கு வினாடிக்கு 71 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்தின் காரணமாக அணையின் நீர்மட்டம் நாள்தோறும் உயர்ந்து கொண்டே இருந்தது. கடந்த 21-ந் தேதி 89 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் அதிகரித்து கொண்டு வந்தது. நேற்று காலை 99.62 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் மதியம் சுமார் 12.30 மணி அளவில் 100 அடியை எட்டியது

இதைத்தொடர்ந்து அணையின் 16 கண் மதகுகள் அருகே காவிரி அன்னைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தேங்காய், பழம் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சந்திரசேகரன் எம்.பி., மேட்டூர் அணையின் நிர்வாக பொறியாளர் தேவராஜன், அணை பிரிவு உதவி நிர்வாக பொறியாளர் மதுசூதனன், மேட்டூர் தாசில்தார் சுமதி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டில் தற்போது தான் முதல் முறையாக அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி உள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இந்த நீர்மட்டம் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி வரை 100 அடியாகவே நீடித்தது குறிப்பிடத்தக்கது. அணை கட்டப்பட்டு 87 ஆண்டுகள் ஆகிய நிலையில், இதுவரை 66 ஆண்டுகள் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது.

மேலும் செய்திகள்