மதுரையில் பயங்கரம்: தலையில் கல்லைப்போட்டு வாலிபரை கொன்ற 5 பேர் கும்பல் - கொரோனா நோயாளிகள் என கிண்டல் செய்ததால் ஆத்திரம்

கொரோனா நோயாளிகள் என கிண்டல் செய்ததால் ஆத்திரத்தில் 5 பேர் சேர்ந்து, வாலிபரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.

Update: 2020-09-25 22:00 GMT
மதுரை,

மதுரை தெற்கு வாசல் காஜாதோப்பு பகுதியை சேர்ந்தவர் பொன்னாங்கன். அவருடைய மகன் பழனி என்ற சரவணகுமார்(வயது 28), கூலி தொழிலாளி. இவர் மீது நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் கொலை, வழிப்பறி, கொள்ளை வழக்குகள் உள்ளன.

நேற்று முன்தினம் இரவு அவர் மீனாட்சி பள்ளம் அருகே கிருதுமால்நதி கால்வாய் அருகே நடந்து சென்றார். அப்போது சிலர் அவரை வழிமறித்து தகராறு செய்தனர். பின்னர் பழனியை கீழே தள்ளி அவரது தலையில் பெரிய கல்லை தூக்கி போட்டதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தெற்குவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பழனியின் உடலை பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட பழனிக்கு திருமணம் ஆகவில்லை. தாய் பூங்காவனத்துடன் வசித்து வந்தார். பழனியை அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார், கார்த்திகேயன், சண்முகம் என்ற வேலு, அரவிந்த் என்ற நரேஷ்குமார், சதாம்உசேன் ஆகியோர் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் விசாரணையில், சில நாட்களுக்கு முன்பு, பழனி அவர்கள் 5 பேரிடமும் “உங்களுக்கு கொரோனா நோய் உள்ளது. எனவே நீங்கள் எங்கள் பகுதிக்கு வரவேண்டாம்” என்று கூறி கிண்டல் செய்திருந்தாராம். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சம்பவத்தன்று பழனியை தனியாக அழைத்துச்சென்று மது வாங்கி கொடுத்தனர். அப்போது அவர்களுக்குள் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே பழனி அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு நடந்து சென்றார். அவர்கள் 5 பேரும் அவரை பின்தொடர்ந்து சென்று தகராறு செய்து, கல்லை தலையில் போட்டு கொன்றுவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து கொலையில் தொடர்புடைய 5 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்