திருமயம் அருகே, மூதாட்டியை கட்டிப்போட்டு நகை-பணத்தை கொள்ளையடித்த 3 பெண்கள் கைது
திருமயம் அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு நகை-பணத்தை கொள்ளையடித்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
திருமயம்,
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள விராச்சிலை கிராமத்தை சேர்ந்தவர் உமையாள்ஆச்சி (வயது 70). இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். மகன்கள் வெளியூர்களில் வசித்து வருவதால், உமையாள்ஆச்சி விராச்சிலையில் தனியாக வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலையில் உமையாள்ஆச்சி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, வீட்டுக்குள் புகுந்த 3 பெண்கள், உமையாள்ஆச்சியை கட்டிப்போட்டு 2 தங்க வளையல்கள், தோடுகள் என மொத்தம் 4 பவுன் நகைகள் மற்றும் ரூ.7 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதற்கிடையில் உமையாள்ஆச்சியின் வீடு திறந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்றுபார்த்தனர். அப்போது உமையாள்ஆச்சி கயிற்றால் கட்டப்பட்டு இருந்தார். உடனடியாக அவரை அவிழ்த்து கேட்டபோது, நடந்தவற்றை கூறினார். இந்த சம்பவம் கிராமம் முழுவதும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் 3 பெண்கள் அந்த பகுதியில் சுற்றித்திரிந்தனர். சந்தேகம் அடைந்த கிராம இளைஞர்கள் அந்த பெண்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அந்த பெண்கள் உமையாள்ஆச்சியை கட்டிப்போட்டு நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. பின்னர், இளைஞர்கள் அந்த 3 பெண்களையும் பனையப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண்கள் சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டியை சேர்ந்த சுரேஷ் மனைவி கருப்பாயி (35), ஆவணிபட்டியை சேர்ந்த வீரப்பன் மனைவி தெய்வானை (40), திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த ஸ்ரீவித்யா (34) என தெரியவந்தது. இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் பத்மா வழக்குப்பதிவு செய்து 3 பெண்களையும் கைது செய்து, உமையாள் ஆச்சியிடம் கொள்ளையடித்த நகை-பணத்தை மீட்டார்.