கொரடாச்சேரி அருகே, தகராறை தட்டிக்கேட்ட அண்ணன் மீது தாக்குதல் - வாலிபர் கைது
கொரடாச்சேரி அருகே தகராறை தட்டிக்கேட்ட அண்ணனை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கொரடாச்சேரி,
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி காவல் சரகம் மேலதிருமதிகுன்னத்தை சேர்ந்தவர் கணேசன். விவசாயி. இவரது மகன்கள் திவாகர்(வயது34), பார்த்திபன்(25). இருவருக்கும் திருமணமாகி அருகருகே தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்தநிலையில் சம்பவத்தன்று மாலை பார்த்திபன் குடித்துவிட்டு தெருவில் நின்று திட்டி கொண்டு இருந்துள்ளார். இதனை பார்த்த திவாகர் ஏன் குடித்துவிட்டு வந்து இப்படி நடந்து கொள்கிறாய் என தட்டிக்கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த பார்த்திபன் என்னை தட்டிக்கேட்க நீ யார்? என கேட்டு திவாகரிடம் வாக்குவாதம் செய்து தகாத வார்த்தைகளால் திட்டி அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து அவரை சரமாரியாக தாக்கினார்.
இதில் படுகாயமடைந்த திவாகரை திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திவாகர் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன் வழக்குப்பதிவு செய்து திவாகரை தாக்கிய பார்த்திபனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.