அரியலூரில், சுவரில் துளையிட்டு துணிகரம்: நகைக்கடையில் 50 பவுன் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை
அரியலூரில், சுவரில் துளையிட்டு நகைக்கடையில் 50 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
அரியலூர்,
அரியலூர் சின்ன கடை தெருவில் நகைக்கடை வைத்திருப்பவர் சவுந்தரராஜன்(வயது 65). அந்த நகைக்கடையை அடுத்து தேங்காய் கடை உள்ளது. இந்த கடையை ராமலிங்கம் என்பவர் நடத்தி வருகிறார். இந்த இரு கடைகளுக்கும் இடையே சுவர் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்னர், வழக்கம்போல் சவுந்தரராஜன் நகைக்கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். அதேபோல் ராமலிங்கமும் தனது கடையை பூட்டிவிட்டு சென்றார்.
நேற்று காலை மீண்டும் தேங்காய் கடையை திறக்க ராமலிங்கம் வந்தார். அவர் தனது கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அவருடைய கடையின் இடதுபுறம் உள்ள சுவரில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு துளை போடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அவர் இதுபற்றி நகைக்கடை உரிமையாளர் சவுந்தரராஜன் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மற்றும் சவுந்தரராஜன் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் நகைக்கடையை திறந்து பார்த்தபோது கடையின் உள்ளே ரேக்கில் வைக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளை போய் இருந்தன. இதில் சுமார் 50 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.19¼ லட்சம் ஆகும்.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்மநபர்கள் தேங்காய் கடைக்கு பின்புறம் உள்ள கதவை உடைத்து உள்ளே நுழைந்து பின்னர் தேங்காய் கடையின் சுவரில் துளையிட்டு நகைக்கடைக்குள் புகுந்து, நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றது தெரிய வந்தது. இது குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.